கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் ஏற்பாட்டில் முப்பெரும் விழா 2023.02.25 ஆந் திகதி சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
பாடசாலையின் கல்வி சார், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கன கௌரவம், பாடசாலைக்கான இணையத்தள அங்குரார்ப்பணம், ஆங்கில (Rainbow) சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு என முப்பெரும் விழாவாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம் இல்லியாஸ் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம்.எஸ் சகுதுல் நஜீம் மற்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம். றபீக் அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை வலய கணக்காளர் அல்-ஹாஜ் வை. ஹபீபுள்ளாஹ், உதவிக் கல்விப் பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஜனாப் என்.எம். அப்துல் மலீக் அவர்களும், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ. சஹறூன் (ஆரம்பக்கல்வி) அவர்களும், சிரேஸ்ட விரிவுரையாளர் (தகவல் தொழிநுட்ப) ஜனாப் ஏ.ஆர்.எம். நிஸாட் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலைக்குரிய இணையதளத்தினை இலவசமாக உருவாக்கித் தந்த பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவரும் BCAS கல்வி நிறுவனத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.ஆர்.முஹம்மட் நிஸாட் பொன்னாடை போர்த்தி பிரதம அதிதியினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு, புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவுச்சின்னம், சான்றிதழ் மற்றும் நினைவு மலர் என்பன அதிதிகளின் பொற்கரங்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்த வகுப்பாசிரியர்களும் , உதவி அதிபரும் பகுதித் தலைவருமான எம்.ஏ.சி.எல். நஜீம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாள்ர் எம்.ஐ.எம். றியாஸ் உட்பட அதன் உறுப்பினர்களான எம்.சீ.எம். ஹஸீர், எஸ்.ஐ. அஸ்மீர், ஏ. ஜலீல் ஆகியோரும் பாடசாலைக்கு வழங்கப்பட்டுவருகின்ற மகத்தான சேவையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வில் அரங்கேறி பார்வையாளர்களை மேலும் பரவசப்படுத்தின.